Friday, September 22, 2006

ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்

சில படித்தவர்களும், அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பது ஒரு சமுதாய குற்றம் என்ற பிரம்மையை ஏற்படுத்த தொடங்கியிள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உறுப்பினராய் இருந்து அழிவதை விட ஒரு நடிகனுக்கு ரசிகனாய் இருப்பது குற்றமில்லை. இந்த விசயத்தில் ரஜினிகாந்த்தை பொறுத்தவரை தன் ரசிகர்களை வன்முறைக்காகவும், தனக்கு சாதகமாவும் பயன்படுத்துவதில்லை. அன்றிலிருந்து, இன்றுவரை ரசிகர்களுக்கு அவர் சொல்லித் தந்தது தனக்கு ரசிகனாய் இருப்பவன் முதலில் தன் குடும்பத்திற்கு நல்ல மகனாய் இருக்க வேண்டும் என்றுதான். சிறிய வயதிலேயே அரசியல் எனும் சூதாட்டத்தால் படிப்பையும் இழந்து, நல்லதோர் வாழ்க்கையும் இழந்து தவிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணக்கிலடங்காதது. இன்றைய ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை நன்றாக சிந்திக்கும் பருவத்தை அடைந்தவர்கள். குடும்பத்தை காப்பாற்றுமளவிற்கு தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ரஜினியின் படங்கள் வருகிறது. அந்த நாட்களில் அவரின் நடிப்பைக் கண்டு எல்லோரும் ரசித்து மகிழ்கிறார்கள். மனதை மகிழவைக்கும் கலைஞனை வாழ்த்துவதும், ரசிப்பதும் நம் இரத்தத்தில் கலந்த ஒன்று. படம் பார்த்தோம், ரசித்தோம், குடும்பத்தை கவனித்தோம், தங்களால் இயன்ற அளவிற்கு சமுதாயப் பணிகளை செய்தோம் என்றிருந்த ரசிகர்களை வன்முறை பாதைக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய அரசியல்வாதிகள். தொண்டை கிழிய மேடைக்கு மேடை பொய் தவிர வேறு எதும் பேச தெரியாத அரசியல்வாதிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் நோட்டிஸ் அடித்தும், கட் அவுட் வைத்தும் அலங்கரிக்கும் அவலத்தைவிட, தங்களின் சொந்த வருமானத்தில் சுயநலமின்றி ரஜினிக்காக நோட்டிஸ் அடிப்பது எந்த விதத்தில் குற்றமாகும்? தவறான பாதைக்கு இளைஞர்களை இழுத்து செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மதம், இனம் பார்க்காமல் தியானம் செய்யுங்கள் கோபத்தை அடக்கி ஆளலாம் என அறிவுரை சொல்லும் ரஜினிகாந்தின் பின் செல்வது எப்படி தவறாக முடியும்? உயிர் நீத்த தொண்டர்களின் சமாதிகளில் ஈரம் உலரும் முன்னே கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு முன்னர், தன் கொள்கை இறந்தாலும் பரவாயில்லை தன் ரசிகர்கள் காக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு கருதி அதிமுகவிற்கும் அதன் கூட்டணிக்கும் ஆதரவாய் தன் ரசிகர்களை தேர்தலில் செயல்படுத்திய ரஜினிகாந்த்தின் நேர்மைக்காக அவருக்கு ரசிகராய் இருப்பவர்கள் பெருமைப்பட வேண்டும். காவிரிக்காக அமைதியான முறையில் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்த போது தர்மம் காக்கப்பட்டது, பாபா படத்திற்காக பாமகவின் வன்முறையை சட்டத்தின் வழியே சந்திப்பேன் என கூறியபோது சட்டம் காக்கப்பட்டது, முடிவாய் ரசிகர்கள் பாமவினரால் தாக்கப்பட்ட நேரத்தில் ஜனநாய முறையில் தேர்தலில் எதிர்ப்பு தெரிவிக்க சொன்னபோது ஜனநாயகம் காக்கப்பட்டது. ரஜினிகாந்த்தின் நடிப்பை மற்றும் ரசித்து யாரும் ரசிகராகவில்லை அவரின் நேர்மையான மனதை புரிந்தும்தான் ரசிகர்களாய் இருக்கிறார்கள். விடிகின்ற ஒவ்வொறு பொழுதிலும் எங்கேயாவது ஒரு ரசிகன் தன் சமுதாயப்பணிகளை செய்துக்கொண்டுத்தான் இருக்கிறான். ஒரு மூன்று வயது சிறுமிக்கு தக்க சமயத்தில் இரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றி வந்த செய்தியை ரஜினிகாந்த் அறிந்தால், கண்டிப்பாய் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாயின் மகிழ்வை ரஜினிகாந்த அடைவார். எல்லா ரசிகர்களும் தன் குடும்பத்தையும் காத்து, இந்த சமுதாயத்துக்கு தன்னாலான உதவிகளை செய்யவேண்டும் என்கின்ற எண்ணத்தை தன் ரசிகர்களுக்கு தந்த இந்த நல் மனிதனுக்காக நம் வாழ் நாள் முழுதும் விளப்பரம் செய்வதும், பேனர் கட்டுவதும் தவறில்லை. இருள் சூழும் இடமெல்லாம் ரஜினி ரசிகர்கள் ஒரு சிறிய மெழுகுவர்த்தியாய் சமுதாய பணிகள் மூலம் வெளிச்சத்தை கொண்டுவருவார்கள் என்பதில் ஐய்யமில்லை. ரஜினிகாந்த் சொல்லித் தந்த அகிம்சை எனும் மந்திரத்தை என்றும் கடைபிடித்து, இந்த சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே ஒவ்வொரு ரசிகர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்.


நன்றி : http://jaggubhai.blogspot.com

1 comment:

Anonymous said...

காந்தி சொன்ன அகிம்சையே புரியாதவனுக்கு ரஜினி சொல்லி மட்டும் புரியுமாக்கும். மேலும், ரஜினி அவர்கள் உண்ணாவிரதம் இருந்ததற்கு காரணம், எங்கே போராட்டத்தில் கலந்துகொண்டால் தனது சொந்த ஊர் கோபம்கொள்ளுமோ என்ற பயமே. பொருளாதாரத்தில் சிறப்பாக உள்ளவன் ரசிகனான வரலாறுகள் நிறைய உண்டு. நலிவுற்றவன் ரசிகனானபின் சிறப்புற்றதாக வரலாறு இல்லை. எனக்குப் புரியாத புதிர் என்னவென்றால், இன்று தமிழ்நாட்டில் ஆக்ரோஷ்யமாக செயற்படும் சமூக நல அமைப்புக்கள் யாவும், எவரதும் ரசிகரல்லாத சமூக சிந்தனையுள்ள, இளைஞர்களால் நடாத்தப்படுகின்றன என்பதே.